வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிகள்.

மனித ஆரோக்கியத்துக்கு கோடைக்காலம் உகந்தது. ஏனென்றால் உடலில் உள்ள எலும்பு சத்துக்களை ஒன்றிணைக்க கூடிய வைட்டமின் ‘டி’ இந்த கோடைக்காலத்தில் தான் சூரிய ஒளியின் மூலம் அதிகமாக கிடைக்கிறது. இதனால் எலும்பு தேய்மானம், எலும்பு அரிப்பு, மூட்டுவாதம், முடக்குவாதம், குதிக்கால் வலி, மூட்டு வலி, கழுத்துவலி இந்த மாதிரியான பாதிப்புகள் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டியால் தடுக்கப்படுகிறது. 

இந்த கோடைக்காலத்தில் தான் எலும்புகள் முழுமையாக வளர்ச்சியடைகிறது. மேலும் பலம் பெறுகிறது. ஆகவே வெயிலை கண்டு பயந்து, குளிர்சாதன அறைக்குள்ளே தங்குவதோ அல்லது வீட்டினுள்ளே முடங்கிப்போய் கிடப்பதோ தவறு. இயற்கையாக கோடைக்காலத்தை பக்குவமாக அனுபவித்து காலை நேரத்தில் சுமார் 10 மணி வரையிலும், மாலை வேளையில் சுமார் 3 மணிக்கு மேலும் நன்றாக வியர்வை சிந்த, விளையாடி அல்லது உடற்பயிற்சி செய்வதின் மூலம் உடல் பலமடைந்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

வெயிலுக்காக ஏ.சி அறையில் அதிக நேரம் தங்குவது, செயற்கை குளிர்பானங்கள் அருந்துவது, தொடர்ந்து ஐஸ் தண்ணீர் அருந்துவது, ரசாயன சுவையூட்டி மற்றும் ரசாயன கலர்கள் கலந்து உணவுகள் உட்கொள்வது எலும்பின் முனைப்பகுதியில் உள்ள குறுத்தெலும்புகளில் நீர் கட்டுகள் ஏற்பட்டு எலும்பை சிதைக்கும். இதற்கு மாறாக பதநீர், இளநீர், பழச்சாறு, புளிக்காத மோர், சிறுதானிய கூழ்வகைகள், வெள்ளரிக்காய், தர்பூசணிக்காய் போன்ற நீர் சத்துக்கள் நிறைந்த இயற்கையான காய்கறிகள், உணவு வகைகளை உட்கொள்வது மிகவும் நல்லது. 

மேலும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல், தினமும் தொப்புள், காலபெருவிரல்களில் விளக்கெண்ணை வைத்துக்கொள்வதும் மிகவும் நல்லது மற்றும் உடலுக்கு ஏற்றது. உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், முடிந்த வரை வெயிலை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளுக்கு எலும்பு மூட்டுக்களின் அதாவது முழங்கை மூட்டு, தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு, கால் தொடைக்கு மேல், இடுப்புக்கு இடையில் உள்ள பந்து கிண்ண மூட்டின் முனைப்பகுதியில் கோடை வெயிலின் உஷ்ணத்தால் கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இந்த கட்டிகளை சுளுக்கு என்றோ, சாதரண வீக்கம் என்றோ, தடவி விடக்கூடாது. இந்த கட்டிகள் வராமல் தவிர்க்க கீழாநெல்லிசாறு அருந்துவது நல்லது. மேலே குறிப்பிட்டபடி இளநீர், பதநீர், பழச்சாறு, பழங்கள், வெள்ளரிக்காய், தர்பூசணிக்காய், சிறுதானிய கூழ்வகைகள் உட்கொள்வதின் மூலம் தவிர்க்கலாம். தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கு தோலின் மேல் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்வது பாதுகாப்பாக அமையும்.  எலும்பு இல்லாத புழுக்களைத்தான் வெயில் சுட்டெரிக்குமே தவிர, எலும்பு கூடுகளால் வடிவமைக்கப்பட்ட நமக்கு வெயில் காலம் நல்லதே!

SHARE