2019 ஐபோன் மாடல்களில் புதிய அம்சங்களை இணைக்கவுள்ள ஆப்பிள்.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் 2019 ஐபோன் மாடல்களின் புதிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன்களை புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம் என பரவலாக கூறப்பட்டது.
இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் புதிய திட்டம் கொண்டிருப்பதாக ஜப்பானில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆப்பிள் இந்த ஆண்டு மொத்தம் ஐந்து ஐபோன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஐபோன்களில் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR மேம்பட்ட வெர்ஷன் மற்றும் 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் அளவுகளில் OLED டிஸ்ப்ளே, மெல்லிய சேசிஸ், பெரிய சென்சார்கள், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 18 வாட் லைட்னிங்கில் இருந்து யு.எஸ்.பி. டைப்-சி வசதி கொண்ட இரண்டு புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய XS, XS மேக்ஸ் மற்றும் XR அப்டேட் மாடல்களில் வழக்கமான சார்ஜர்களுடன் ஒரே மாதிரியான சேசிஸ் கொண்டிருக்கும் என்றும் XR மாடலில் விலை குறைவான எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
இவற்றை பார்க்கும் போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS-ஐ விட புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலை அறிமுகம் செய்யலாம் என்றும் இது ஐபோன் ப்ரோ என்ற பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் தற்சமயம் ஏழு ஐபோன்களை விற்பனை செய்கிறது. இவற்றில் மூன்று தலைமுறை ஐபோன்கள் அடங்கும். இத்துடன் ஆறு ஆப்பிள் வாட்ச்கள், ஐந்து ஐபேட்கள், மூன்று ஆப்பிள் டி.வி.க்கள் மற்றும் ஆப்பிள் டி.வி. பிளஸ் ஸ்டிரீமிங் சாதனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறது.
SHARE