தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் நிணநீர் மண்டலம்.

நமது உடம்பிலுள்ள நிணநீர் மண்டலம் (Human Lymphatic System) நம்மை தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் நம் உடம்பிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி நம் உடலிலுள்ள திரவ சமநிலையைப் பாதுகாக்கிறது.

நமது நிணநீர் மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்கள் சேர்ந்த வலைப்பின்னல் ஆகும். இதுவே உடலிலுள்ள நச்சுப்பொருள், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற வகை செய்கிறது. இம்மண்டலம் நம் உடலின் நோய் எதிர்ப்புசக்தி செயல்பாட்டிற்கு பெரும் பங்கு வகிக்கிறது. மண்ணீரல் மற்றும் தைமஸ் நிணநீர் மண்டலத்தின் முக்கிய உறுப்புகள் ஆகும்.

மண்ணீரல் ரத்த சுத்திகரிப்பு பணியில் தீவிரமாக செயல்படுகிறது. இது ஆபத்தான பாக்டீரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிர்களைக் கண்டுபிடிக்கிறது. உடனே நோய் எதிர்ப்பு தரும் ரத்த உயிரணுக்களான ‘லிம்போசைட்ஸ்’ என்னும் நிணநீர்க் கலங்களை உற்பத்தி செய்கிறது. இது உடலினுள் நுழைந்த நோய் தரும் படையை எதிர்க்கும் பாதுகாவலர்களாக செயல்பட்டு நோய் மேலும் பரவாமல் தடுக்கிறது.

தைமஸ் முதிர்ச்சியடையாத நிணநீர்க் கலங்களை சேமித்து அதை செயல்படும் நிணநீர்க் கலங்களாக தயார் செய்கிறது.

நிணநீர் நாளங்களின் வலைப்பின்னல் நம் உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் விநியோகிக்க ஏதுவாய் பரந்துள்ளது. மேலும் இதனுள் தெளிந்த நிறமற்ற நிணநீர் திரவம் ஓடிக்கொண்டிருக்கும். இந்த நிணநீரே நோய் எதிர்கொண்ட பகுதிக்கு நிணநீர் கலங்களைக் கொண்டு செல்லும்.

எப்போது நம் உடலில் பாக்டீரியாக்கள், வைரஸ் உள் நுழை கிறதோ அப்போது இந்த நிணநீர்க்கலங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிணநீர்க்கலங்கள் அந்த நுண்ணுயிரிகளைக் கொல்லக்கூடிய எதிர்ப்புப் பொருளான ஆண்டிபாடிஸ் (Antibodies) களை உருவாக்கும். நிணநீர் மண்டலம் உடலின் வேண்டாப் பொருட்களை வெளியேற்றும் வடிகாலாகவும் செயல்படுகிறது.

உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புக்களில் தேங்கியுள்ள, அதிகமாயிருக்கும் வேண்டா திரவப் பொருட்களை சேகரிக்கிறது. பின்னர் அதை ரத்த ஓட்டத்தில் திருப்பி அனுப்புகிறது. இந்த அதிகமுள்ள திரவத்தை நிணநீர் மண்டலம் வெளி யேற்றாதபோது அத்திரவம் உடலினுள் சேர்ந்து ஒரு வீக்கத்தை உருவாக்குகிறது. இதற்கு “நிணநீர் தேக்க வீக்கம்” (Lymphedema) என்பர்.

மேலும் நிணநீர் மண்டலம் உணவு செரிமான மண்டலத்திலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பைக் கரைக்கும் வைட்டமின்களையும் உறிஞ்சும் தன்மை பெற்றது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட ஊட்டச்சத்துப் பொருளை உடலிலுள்ள எந்தெந்தப் பகுதியிலுள்ள செல்களுக்கு சத்து தேவையோ அங்கு வழங்குகிறது.

மேலும் நிணநீர் மண்டலம் உடலுக்குத் தேவையற்ற நச்சு மற்றும் மாசு தரக்கூடிய பொருட்களை உடலில்இருந்து வெளியேற்றவும் உதவுகிறது. உதாரணமாக கார்பன்-டை-ஆக்ஸைடு, சோடியம் மற்றும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்களை சுவாசம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

நவீன ஆராய்ச்சிகளில் மனித மூளையிலும் நிணநீர் நாளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூளையை சுற்றியுள்ள மிகவும் வெளிப்புறத்திலுள்ள ‘டியூரா’ (dura) என்னும் ஜவ்வில் இந் நாளங்கள் உள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிணநீர் நாளங்கள் மூளையின் உட்பகுதியிலுள்ள தனி அறைகளிலிருந்து திரவத்தை எடுப்பதாகவும் அதை நிணநீர் மண்டல உதவியுடன் திரவ வெளியேற்றம் நடப்பதாகவும் கண்டு பிடித்துள்ளனர்.

SHARE