நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இலங்கை ஐக்கிய நாடுகளின் அறிக்கை

உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இருவர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான தாக்குதல்களை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

இலங்கையின் சகல மக்களும், மதத் தலைவர்களும், அரசாங்கமும், எதிர்கட்சியினரும், பொது அமைப்புக்களும் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் இவ்வாறான விரும்பத் தகாத சம்பவங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறுகல் நிலையை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இலங்கை ஐக்கிய நாடுகளின் அறிக்கை
2019 மே 14 (கொழும்பு) – உயிர்த்தெழுந்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் விளைவுகளாக சமூகங்களுக்கிடையில் உருவாகிவரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் பதற்றநிலை தொடர்பாக இலங்கை ஐக்கிய நாடுகள் அதிக அக்கறை காட்டி வருகின்றது. இந்த சூழ்நிலை மென்மேலும் பரவாதிருப்பதை உறுதி செய்யுமாறு, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு படையினரை ஐக்கிய நாடுகள் கேட்டுக்கொள்கின்றது.
ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட துவேஷ வெளிப்படுத்தல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து அரசியல், சமயம் மற்றும் ஏனைய சமூகத் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தெரிவித்த வெளிப்படையான கண்டனங்களை ஐக்கிய நாடுகள் பெரிதும் வரவேற்கின்றது. ஒரு நாடு என்ற வகையில் நிலையான சமாதானத்தை பேண வேண்டிய சந்தர்ப்பத்தில் இலங்கை இருப்பதோடு, இவ்வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து துவேஷத்தை நிராகரிப்பது முக்கியமானதாகும்.
பாதுகாப்பு குறித்த அச்சத்தை அல்லது வன்முறைக்கு இட்டுச்செல்லும் தவறான தகவல்;களை பரப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பினை ஒவ்வொரு பிரஜையும் கொண்டுள்ளார். துவேஷத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள் ஒற்றுமையை பெரிதும் குலைப்பதோடு தற்போதைய நிலைமையில் பதற்றத்தையும் பயத்தையும் மேலும் தீவிரமாக்கும்.
அத்துடன் அவசரகால சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, அனைத்து சமூகத்தினர் மற்றும் தனி நபர்களின் உரிமைகளை மதிக்கும் விதமாக தகுந்த, பாரபட்சமற்ற முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் பாதுகாப்பு அமைப்புகளை இலங்கை ஐக்கிய நாடுகள் கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் வன்முறையை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் உரிய அதிகாரிகளை வலியுறுத்துகின்றது.
நாம் அனைவரும் இணைந்து சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தருணமே இது. இது தொடர்பாக அனைவரையும் உள்ளடக்கிய, ஒன்றிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படுவதோடு, அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்புக்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் அதனை முன்னெடுத்தல் வேண்டும். எவ்வித இன, மத வேறுபாடுகளுமின்றி ஒவ்வொரு இலங்கையரதும் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும்.

SHARE