சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்?

செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான அளவை விட அதிலுள்ள அதிகமான சர்க்கரை உடலில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

டீ அருந்தும் பெரும்பாலானோர் அதில் சர்க்கரை சேர்த்துத்தான் பருகுவார்கள். ஆனால், டீயில் சர்க்கரையை கலந்து குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது ஆய்வாளர்கள் கருத்து.

டீ குடிக்கும் ஒருவர் நீண்டகால அடிப்படையில் முயற்சிக்கும்போது, எவ்வித பிரச்சினையுமின்றி, சர்க்கரையோடு டீ குடித்தபோது இருந்த உற்சாகத்துக்குக் குறைவில்லாமல், சர்க்கரை இல்லாமலே இருக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஒரேயடியாகவோ அல்லது படிப்படியாகவோ டீயில் சர்க்கரையின் தேவையைக் குறைப்பது இதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க பலனைத் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், தங்களது ஆய்வு முடிவுகளை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு பெரிய அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக சர்க்கரை கலந்து டீ குடிக்கும் 64 ஆண்களை ஒரு மாத காலத்துக்கு இதுதொடர்பான ஆய்வுக்கு லண்டன் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தினர்.

ஒரு மாதகால ஆய்வுக்குப் பின்னர், டீயில் சர்க்கரையின் அளவைக் குறைத்த குழுவினர்கள், எவ்வித மாற்றமும் இன்றி டீயை தொடர்ந்து விரும்பிக் குடிப்பது தெரியவந்தது.

அதாவது, ஆராய்ச்சியின் முடிவில், படிப்படியாக சர்க்கரையைக் குறைத்து பயிற்சி செய்த குழுவைச் சேர்ந்தவர்களில் 42 சதவீதத்தினர் நிரந்தரமாக சர்க்கரையை நிறுத்தினர். அதேபோன்று, ஒரேயடியாக சர்க்கரையை நிறுத்தி பயிற்சி செய்தவர்களில் 36 சதவீத்தினர் நிரந்தரமாக சர்க்கரையை கைவிட்டனர்.

ஆச்சரியமளிக்கும் வகையில், தொடர்ந்து ஒருமாத காலம் டீயில் சர்க்கரை கலந்து குடித்து வந்தவர்களில் 6 சதவீதத்தினரும் அதை ஒதுக்கினர். இதேபோன்று மற்ற வகை பானங்களிலும் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கு மக்கள் முயற்சிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

சரி, சர்க்கரையை ஏன் தவிர்க்க வேண்டும்?

காபி, டீ மட்டுமின்றி நாம் சாப்பிடும், அருந்தும் பல்வேறு வகையான உணவுப் பொருட்களிலும் சர்க்கரை மிகுந்து காணப்படுகிறது.

சர்க்கரையைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று பால், பழம், தேன் போன்றவற்றிலிருந்து இயல்பாகக் கிடைப்பது. மற்றொன்று, கரும்புச் சாறு போன்றவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சர்க்கரை.

இதில் இரண்டாவது வகை சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நீண்டகால அடிப்படையில் உடலின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒருவரது உடலுக்குத் தேவையான சர்க்கரை இயல்பாகக் கிடைக்கும்போது, அது செரிக்கப்பட்டு தசைகள் மற்றும் மூளைக்குத் தேவையான சக்தியை அளித்து அவரை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கிறது. ஆனால், செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான அளவை விட அதிலுள்ள அதிகமான சர்க்கரை உடலில் பிரச்சினையை உண்டாக்குகிறது.

அதாவது, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் உயர்ந்து, உடலுக்குச் சோர்வை உண்டாக்குவதுடன், எரிச்சலை ஏற்படுத்தி, மென்மேலும் சர்க்கரை கலந்த உணவு, பானத்தை உட்கொள்வதற்குத் தூண்டும். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரின் உடல் எடை அதிகரிப்பதுடன், சர்க்கரை நோய் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

SHARE